கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் இன்று 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம். இவர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று காஞ்சிகோவில் உள்ள குழந்தைசாமியின் வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் கதவை மூடினர். வீட்டில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை வருமான வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதேபோல் இவர்களுக்கு தொடர்புடைய ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, ஈரோடு பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். அவருடைய உறவினர் ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இன்று மீண்டும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் காஞ்சிகோவிலில் உள்ள குழந்தைசாமி வீட்டில்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு பெரியார் நகர், கருப்பண்ணன் வீதி, பார்க் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் நாமக்கல் ஒப்பந்ததாரரின் உறவினர் வீட்டிலும் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news