‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள்.
மேலும், சோதனை நடத்தப்படும் நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ் போக்குவரத்து, மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களும் நடத்தப்படுகிறது. எனவே ஈரோடு, கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளரின் வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை விடிய விடிய நடத்தப்பட்டு உள்ளது. நேற்று 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனை நடத்தப்படும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனையின்போது அனைத்து கோப்புகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையில் சுமார் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்கள், பணியாளர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.