X

கட்சி மேலிடம் அழைப்பு! – டெல்லி புறப்பட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.

Tags: south news