கட்சி ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை! – ரஜினிகாந்த் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பல விதமாக வந்தன. எனது அரசியல் பிரவேசம் குறித்து பலவிதமான தகவல்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது உங்களை சந்தித்து இருக்கிறேன்.
2017க்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை. 1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிஸ்டம் சரியில்லை என கூறினேன்.
அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். திமுக மற்றும் அதிமுக ஆகியவை மிகப்பெரிய கட்சிகள். அந்த கட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதுபோன்ற பதவிகள் தேர்தல் நேரத்தில்தான் தேவை. ஆனால் ஆட்சி வந்ததும், கட்சி பதவிகளை தொழிலாக வைத்துள்ளனர். கட்சி பதவியை சிலர் தொழிலாக வைத்துள்ளதால்தான் முறைகேடுகள் நடக்கின்றன.
அரசியலில் இப்போது 50 வயதுக்கு கீழ் உள்ள எம்எல்ஏக்கள் மிகவும் குறைவு. இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். புதியவர்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல நான் பாலமாக இருப்பேன். 30 முதல் 35 சதவீதம் பல்வேறு துறை நிபுணர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்.
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு. நான் முதலமைச்சர் பதவியை நினைத்து பார்த்ததே கிடையாது. நிறையபேர் இதுபற்றி என்னிடம் பேசினார்கள். 1996ல் கூட எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சி தலைமையை மட்டுமே நான் கவனிப்பேன். படித்தவர்கள், சிந்தனையாளர்கள், தன்மானம் உள்ளவர்களை முதல்வராக அமர வைபேபாம். முதல்வர் பதவியில் நாங்கள் அமர வைக்கும் தலைவர், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அவரை தூக்கி எறிவோம்.
முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறியதை யாருமே ஏற்கவில்லை. நிர்வாகிகள் பலர் இதனை ஏற்காததையே நான் ஏமாற்றம் என் கூறினேன். நீங்கள் முதல்வராக இருக்காவிட்டால் அரசியல் எடுபடாது என பலர் கூறினர். அரசியலில் எம்எல்ஏ, அமைச்சர் ஆகி அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. தலைமை சொல்வதை கேட்பவர்கள்தான் தொண்டர்கள். எனது முடிவு ஒரு ராஜதந்திரம். நான் முதல்வராக வரவேண்டும் என ரசிகர்கள் சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.