கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர் – தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி மலைக் கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன். நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு “எனக்கும் முதல்-அமைச்சர் கனவு உண்டு” என்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தேன். அதாவது, எளிய மக்களும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான். இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால் தான் கோலம் போட முடியும். ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் அங்குலம், அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத, அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் வலிமை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.