பிரஜின், காயத்ரி ரெமா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அக்கு”. இந்த படத்தை ஸ்டாலின் வி இயக்கி இருக்கிறார். பொன் செல்வராஜ் தயாரித்து பிரஜின் நாயகனாக நடித்து இருக்கும் “அக்கு” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் படக்குழுவுடன் நடிகர் சவுந்தரராஜா கலந்து கொண்டார். அப்போது நடிகர் சவுந்தரராஜா பேசியதாவது.., “இந்த படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் பிரஜின் நண்பராக மட்டும் தான் இங்கு வந்து இருக்கிறேன். 2002-ம் ஆண்டு சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பிரஜின். அப்போதில் இருந்தே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எங்களுக்குள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால நட்பு இருக்கிறது.
“சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 69-வது தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் மணிகண்டன் இயக்கிய “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.” “கடைசி விவசாயி” படத்தில் விவசாயி-இன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும். இதனால், பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் இந்த படம் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், உலக அளவில் இந்த படம் அங்கீகாரம் பெற்று இருக்கிறது. இதனால், இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.