காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அதன்பின் இயக்கி வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பாராட்டி இயக்குனர் ராஜு முருகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கண்ணீர் திரையிடப் பார்த்தேன், ‘கடைசி விவசாயி’. நிச்சயமாக இது இந்திய சினிமாவின் மைல்கல்களில் ஒன்று. இப்படியான படைப்பை அளித்த தோழன் மணிகண்டனுக்கு நிறைய நிறைய அன்பு. அசல் நாயகனாக வாழ்ந்திருக்கும் நல்லாண்டி அய்யாவுக்கு வணக்கங்கள். தயாரிப்பில் பங்களித்து நடித்திருக்கும் அற்புதமான கலைஞன் விஜய் சேதுபதி, நல்லிசை தந்திருக்கும் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.