Tamilவிளையாட்டு

கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை – ரோகித் சர்மா கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. கேமரூன் க்ரீன் 52 ரன்னும், டிம் டேவிட் 54 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாகல், ஹர்ஷல் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் வீராட் கோலி (63 ரன்), சூர்யகுமார் யாதவ் (69 ரன்) சிறப்பாக விளையாடினர். இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

ஐதராபாத் ஒரு சிறப்பான இடம். இந்தியா அணி மற்றும் ஐ.பி.எல். போட்டி என எங்களுக்கு நிறைய நினைவுகள் உண்டு. இது ஒரு சிறந்த தருணம். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அதை சிறப்பாக செய்தோம். வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகப்பெரிய பலமாகும்.

சில நேரங்களில் நிறைய விஷயங்களை செய்யும்போது தவறு செய்யலாம். இது 20 ஓவர் கிரிக்கெட். தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கான வாய்ப்புகளை எடுத்து கொண்டு தைரியமாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். அது சில நேரங்களில் வராமல் போகலாம். ஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம்.

பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சிறப்பான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது, இது ஒரு நல்ல தொடராக இருந்தது. இது போதுமான ஸ்கோர் என்று நினைத்தோம். கொஞ்சம் பனி தாக்கம் இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். சில சமயங்களில் எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது, என்றார்.

இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 28-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.