கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய அம்சங்கள் கடந்த சில தினங்களாக சர்வதேச பங்குச் சந்தைகளை ஆட்டம்காணச் செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9590 புள்ளிகளில் நிலைபெற்றது.
இந்நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கியபோது, கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் 3150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 3177 புள்ளிகள் சரிந்து 29600 என்ற அளவில் வர்த்தகம் ஆனது.
இதேபோல் நிப்டி 10 சதவீதம் அளவிற்கு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை வர்த்தகத்தின்போது நிப்டி 966 புள்ளிகள் சரிந்து 8624 என்ற அளவில் தடுமாற்றத்துடன் இருந்தது. இந்த சரிவினால், முதலீட்டாளர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதையடுத்து ஒரு மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.