X

கடும் குளிரால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு

தலைநகர் டெல்லி, டெல்லி தலைநகர பிராந்தியம் மற்றும் வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி மூட்டம் விலகாததால் வாகனங்கள் மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றன.

டெல்லியில் இன்று அதிகாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் டெல்லிக்கு வரும் 4 விமானங்கள் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணம் தொடர்பான அப்டேட் தகவல்களுக்கு விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லி பாலம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு 9.8 டிகிரி செல்சியஸ் என மிகக்குறைந்த வெப்பநிலை பதிவாகியிருந்தது. அடுத்த 24 மணி நேத்தில் மேலும் 0.2 டிகிரி செல்சியஸ் குறைய வாயப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சப்தர்ஜங்கில் 8.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையில், மேலும் 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.