வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31-ந் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் இருந்து கடும்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரி செல்சியசும், லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4 டிகிரி வெப்பநிலையும் நிலவியது.
மேலும் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.