கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வடகொரியா! – அதிபர் கின் ஜான் உன்னின் ஆடம்பர வாழ்கை
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன் வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பதில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் உலகிலேயே சிறந்தவற்றை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் அவர் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியைத்தான் உண்கிறார். பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், “கிம் ஜாங் உன் ஒரு மது பிரியர். அதிலும் அவர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஹென்னெஸ்ஸி பிராந்தி ஆகியவற்றையே விரும்பி பருகுகிறார். இதன் விலை, பாட்டில் ஒன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் ($7000) ஆகும்” என கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பொது சுங்க நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தக தரவுகளின்படி, 40 வயதாகும் கிம், வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 250 கோடி ($30 மில்லியன்) செலவிடுகிறார். கிம், மதுவகைகளை தவிர மிகச்சுவையான உணவு வகைகளையும் விரும்பி உண்கிறார்.
பார்மா ஹாம், (இத்தாலியின் பார்மா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வகை உணவு) மற்றும் சுவிஸ் எமென்டல் சீஸ் ஆகியவற்றையே ரசித்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் மற்றும் அவரது தந்தை, இருவருமே கோப் ஸ்டீக்ஸ் (Kobe steaks) எனப்படும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி மற்றும் கிறிஸ்டல் ஷாம்பெயின் (Cristal champagne) ஆகியவற்றை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்,” என அவரது முன்னாள் சமையல்காரர் கூறியிருக்கிறார்.
கிம் குடும்பத்திற்காக பிரத்தியேகமாக பீட்சா தயாரிக்க 1997ல் இத்தாலிய சமையல்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, விலையுயர்ந்த பிரேசிலியன் காபியைத்தான் கிம் அருந்துகிறார். இதற்காக அவர் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 8 கோடி ($967,051) செலவழித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மென்மையான தங்கப்படலத்தில் மூடப்பட்டிருக்கும் எவ்ஸ் ஸெயின்ட் லாரன்ட் (Yves Saint Laurent) வகை கருப்பு சிகரெட்டுகள் தான் அவர் விரும்பி புகைக்கிறார். 2014ம் ஆண்டு யூ.கே. மெட்ரோ (UK Metro) தெரிவித்த ஒரு செய்தியில் கிம் தொடர்ந்து “பாம்பு ஒயின்” உட்கொள்வதாக கூறியது. இது ஆண்மையை அதிகரிக்கும் என்றும் குழந்தைபேறுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம், “அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல்” ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும், அவரது எடை 136 கிலோ தாண்டியுள்ளது என்றும் தென்கொரிய உளவுத்துறை அறிக்கைகள் வந்த பின்னர் கிம் ஜாங் உன்னின் ஆடம்பரமான உணவுமுறை பற்றிய செய்திகள் வந்துள்ளன.
மார்ல்போரோ சிகரெட்டுகள் (Marlboro cigarettes) மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சோல்பிடெம் (zolpidem) போன்ற மருந்துகள் உட்பட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.