Tamilசெய்திகள்

கடுமையாக உழைத்தால் வெற்றி உறுதி – பா.ம.க தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாம் வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு ஆகியவற்றை நாம் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். நமக்கும், கூட்டணிக்கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் எந்த மனக்கசப்பும் இல்லை என்பதே நமது அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்றும் நாம் வெற்றிகரமாக அறிவித்திருக்கிறோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்றைய பொழுதையும் சேர்த்து இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கிவிட்டது.

நமக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் மிகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் களத்தில் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்டு, இன்று முதல் 25 நாட்களுக்கு நாம் கடுமையாக உழைத்தால் சட்டப்பேரவையின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆத்தூர் (திண்டுக்கல்) வரை அனைத்து 23 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி நடமாட வேண்டும், வணிகர்கள் அச்சமின்றி வணிகம் செய்ய வேண்டும். நிலவுடைமையாளர்கள் தங்களின் நிலம் அபகரிக்கப்பட்டு விடுமோ? என்று அஞ்சி நடுங்கும் நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது.

பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தொல்லையின்றி சென்று வரும் நிலை உறுதி செய்யப் பட வேண்டும் என்றால் அதற்கு பா.ம.க.வும், அதில் அங்கம் வகிக்கும் அ.தி. மு.க.கூட்டணியும் வெற்றி பெற வேண்டும்

பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மீதமுள்ள 211 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது இன்னும் பல மடங்கு முக்கியமாகும். இதை உணர்ந்து பா.ம.க. வினர் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.பா.ம.க. வெற்றியையும், 234 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியையும் உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.