பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு, கடந்த வாரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததால், இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாகவும் அவர்கள் மீது போர் தொடுத்திருப்பதாகவும் கூறி பாலஸ்தீனம் முழுவதும் அந்த அமைப்பினரை இஸ்ரேல் ராணுவ படை தேடி தேடி வேட்டையாடி வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.
இப்பின்னணியில் தனது நாட்டு மக்களை எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருக்குமாறு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் இரு தினங்களுக்கு முன் கேட்டு கொண்டார். மேலும் அவர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து உள்நாட்டில் எந்த சர்ச்சையோ மோதலோ பிரான்ஸில் எங்கும் இடம்பெறுவதை தவிர்க்குமாறு மக்களை கேட்டு கொண்டார்.
இந்நிலையில், பிரான்ஸின் வடக்கே உள்ள அர்ராஸ் பகுதியில் லைசி கேம்பெட்டா உயர்நிலை பள்ளியில் (Lycee Gambetta High School) பணி புரிந்து வந்த டொமினிக் பெர்னார்ட் (Dominique Bernard) எனும் பிரெஞ்சு மொழி ஆசிரியரை மொஹமெத் எம். (Mohamed M.) எனும் 20 வயதான அப்பள்ளியின் முன்னாள் மாணவர், கத்தியால் குத்தினார். இதில் அந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு ஆசிரியரையும் ஒரு காவலாளியையும் அந்த இளைஞர் குத்தியதில் அவர்கள் காயமடைந்தனர். கடவுளின் பெயரை கூச்சலிட்டு கொண்டே இக்கொலையை மொஹமெத் செய்ததாக அங்கு இருந்த பலர் கூறியுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தையடுத்து உடனடியாக அந்த பள்ளிக்கே நேரில் சென்ற அதிபர் மேக்ரான், அந்த ஆசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினார். “தனது உயிரை விலையாக கொடுத்து பல உயிர்களை அந்த ஆசிரியர் காப்பாற்றி உள்ளார். நம்மை எந்த சக்தியும் பிரிக்க முடியாது” எனவும் அவர் கூறினார்.
இந்த கொலையை செய்த மொஹமெத் மற்றும் அவரது சகோதரர், பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு அந்நாட்டின் தீவிரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை செய்த மொஹமெத் ஏற்கனேவே பிரான்ஸ் உளவு அமைப்பினரால் கண்காணிப்பில் இருந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியிலும் தற்போதைய சம்பவத்தினாலும் அந்நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அமலுக்கு வந்திருக்கிறது.