Tamilசெய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை! – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று காலை மற்றும் இரவும் இந்த மழை நீடித்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கடலூரை பொறுத்த வரை நேற்று ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடலூர் வில்வநகர், கூத்தப்பாக்கம், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், பாதிரிக்குப்பம், சுனாமி நகர், சங்கர் நகர், கூட்டுறவு நகர், விஜயலட்சுமி நகர், தங்கராஜ் நகர், கம்மியம்பேட்டை, சக்தி நகர், வண்டிப்பாளையம், புதுப்பாளையம், வில்வராயநத்தம் உள்பட 80-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் தேங்கி நின்ற தண்ணீரை மோட்டார் மற்றும் வாளியை கொண்டு வெளியேற்றினர்.

இருப்பினும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி தீவுபோல் காட்சி அளிக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யை அடுத்த ரோமாபுரி பகுதியில் உள்ள முட்டன்ஏரி மற்றும் என்.எல்.சி. ஏரி ஓடை பகுதிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

அந்த தண்ணீர் கடலூர்-விருத்தாசலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் புதுஇளவரசன்பட்டு, பாப்பனம்பட்டு, குறிஞ்சி நகர், கம்மாபுரம் பகுதியில் உள்ள 300 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் வீடுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

இதேபோல் கே.என்.பேட்டை, உச்சிமேடு, கோண்டூர், காட்டுமன்னார்கோவில், கல்லறைகுட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுக்தாறு, வெள்ளாறு, காவிரியின் கிளையான கொள்ளிடம் ஆறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் செல்கிறது.

மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் 300-க்கும் மேற்பட்ட சிறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து ஏரிகளையும் தங்களது கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு இன்றும் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலையும் சுமார் ½ மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *