X

கடலூர் ஆணவக்கொலை வழக்கு – 13 பேருக்கு தண்டனை

கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடூரமாக கொன்றதுடன், சடலங்களை எரித்துள்ளனர்.

சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.