X

கடலூரில் ஒரு கிலோ தக்காளியை ரூ.20-க்கு விற்பனை செய்த வியாபாரி!

இந்தியாவில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை பகுதியில் 130 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது விற்பனை நடைபெற்று வருகின்றது.

மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வடமாநில பகுதிகளில் தொடர் மழை காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் மாறுபட்ட விலையில் தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி சாம்பார் வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதோடு தக்காளியை மட்டும் மிக குறைவாக வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என அறிவித்து தக்காளி விற்பனையை தொடங்கினார். இதனை பார்த்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கடையில் போட்டி போட்டுக் கொண்டு கிலோ 20 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர்.

மேலும் ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டு தக்காளி வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரி ராஜேஷ் கூறுகையில், வட மாநில பகுதியில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்த காரணத்தினால் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் பொதுமக்கள் 50 கிராம், 100 கிராம் என்ற அளவிற்கு மட்டுமே தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

வட மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி வாங்கிக்கொண்டு இங்கு 20 ரூபாய்க்கு சேவை நோக்கத்துடன் மக்களுக்கு விற்பனை செய்து உள்ளேன். இன்று காலை 600 கிலோ தக்காளி வரவழைத்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதால் தீர்ந்து விட்டன. மேலும் வியாபாரிகள் பொதுநலத்துடன் இதுபோன்று விலை ஏற்றத்தின் போது விலையை குறைத்து கொடுத்து உதவ வேண்டும் என்றார்.

இந்த நிலையில் கடலூர் பகுதியில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: tamil news