வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட அவர்கள், கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.
இரவு விருந்திற்கு பிறகு மோடி கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை கடற்கரையில் பிரதமர் மோடி நடைபயிற்சி மேற்கொண்டபோது சுமார் அரை மணி நேரம் துப்பரவு பணியில் ஈடுபட்டார். கடற்கரையில் ஆங்காங்கே பொதுமக்களால் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் மோடி. அதில், நமது பொது இடங்கள் சுத்தமாகவும் துப்புரவாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! நாம் உடற்திறனுடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.