Tamilசெய்திகள்

கடந்த 2 ஆண்டுகளில் 274 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது – குஜராத் அமைச்சர் தகவல்

அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கணக்குப்படி குஜராத் மீனவர்கள் 560 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, குஜராத் சட்டசபையில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்த மாநில மீன்வளத்துறை மந்திரி ராகவ்ஜி படேல் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 274 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில் 193 பேரும், கடந்த ஆண்டில் 81 பேரும் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அதேநேரம் கடந்த 2 ஆண்டுகளில் 55 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களின் 323 குடும்பங்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தினசரி ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் 428 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவித்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.