Tamilசெய்திகள்

கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்த சென்னை துறைமுகம்

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.