Tamilவிளையாட்டு

கடந்த சில ஆட்டங்களில் பந்து வீச்சு சரியாக இல்லை – இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி ‌வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 237 ரன் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 28 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி , 4 சிக்சர்), விராட் கோலி 28 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 37 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 17 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடியே தோற்றனர். 5-வது வீரராக களம் இறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 47 பந்தில் 106 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), குயின் டன் டி காக் 48 பந்தில் 69 ரன்னும் (3பவுண்டரி, 4சிக்சர்), மர்கிராம் 19 பந்தில் 33 ரன்னும் (4 பவுண் டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, கடைசி ஆட்டத்தில் பந்து வீச்சு நன்றாக அமையவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். ஆனால் கடந்த சில ஆட்டங்களாக அணியின் பந்து வீச்சுகள் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

கடந்த 5 அல்லது 6 ஆட்டங்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. கடைசி ஆட்டத்தில் (டெத்ஓவர்) பந்து வீச்சு நன்றாக அமையவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க விரும்புகிறோம். டெத் ஓவர்களில் பந்து வீசுவது சவாலானதே. ஆனால் அதுதான் ஆட்டத்தை முடிவு செய்கிறது. இது கவலைக்குரியது இல்லை. ஆனால் நமது செயலை ஒன்றிணைக்க வேண்டும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றிய அர்ஷ்தீப்சிங் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி கொடுத்தார். அவர் 19-வது ஓவரில் 26 ரன்களை வழங்கினார். அவர் 4 ஓவரில் 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். அக்‌ஷர்படேல் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 20 ரன் கொடுத்தார். அவர் 4 ஓவரில் 53 ரன்களை வழங்கினார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.