X

கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வரும் தங்கம் விலை!

தங்கத்தின் மீதான விலை ஏற்றம் சமீபகாலமாக வாடிக்கையாளர் இதயத்துடிப்பை எகிற செய்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த மாதம் 28-ந்தேதி, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. அதனைத்தொடர்ந்து ஏறுமுகத்தில் வீறுநடை போட்டு வந்த தங்கத்தின் விலை மக்களை பீதியடைய செய்து வருகிறது. அந்த நிலை நேற்றும் தொடர்ந்தது.

சென்னையில் நேற்றுமுன்தினம் கிராம் ரூ.3 ஆயிரத்து 190-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 196-க்கும், பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிராம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 168-க்கும் தங்கம் விற்பனை ஆனது. அந்தவகையில் கடந்த 1½ மாதத்தில் மட்டும் தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ரூ.1,400 உயர்ந்து உள்ளது.

தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வு குறித்து சென்னை தங்க-வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

அமெரிக்காவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்காவின் எல்லை பரப்புகளில் வேலி அமைப்பது எனும் அரசின் உத்தரவுக்கு அங்குள்ள மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்து பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவருகிறது.

அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த 2 காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நகைக்கடைகளிலும் வியாபாரம் குறைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்து காணப்பட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.43.40-க்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 400-க்கும் வெள்ளி விற்பனை ஆனது. இந்தநிலையில் முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.