X

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜி.எஸ்.டி வசூல் 18 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூலில் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இருப்பினும் இது முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத வசூலை விட 18 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:

ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி வசூலானது. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி ரூ.1.33 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வசூல் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகம் ஆகும்.

பிப்ரவரி 2022-ல் வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,33,026 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.24,435 கோடி, மாநில ஜி.எஸ்.டி ரூ.30,779 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி ரூ.67,471 கோடி (ரூ. 33,837 கோடி வசூல் மற்றும் பொருட்கள் இறக்குமதி மூலம்) ரூ.10,340 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 638 கோடி உட்பட) வசூல்  ஆகும்.

பிப்ரவரி 28- நாள் மாதமாக இருப்பதால், பொதுவாக ஜனவரி மாதத்தை விட குறைவான வருவாய் கிடைக்கும்.

பிப்ரவரி 2022-ல் இந்த வளர்ச்சியானது நேரக் கட்டுப்பாடு, வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் ஓமிக்ரான் அலை காரணமாக பல மாநிலங்களால் போடப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் பின்னணியிலும் காணப்பட வேண்டும். இது ஜனவரி 20-ம் தேதி உச்சத்தை எட்டியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.