தமிழக அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் – அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.
இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,361.41 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.
மேலும் தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2019-2020-ம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக, இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 லட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1,700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவின் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக் கொள்ளும்.
மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ் நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் உள்ளதால், ஏற்றுமதிக்கு பல்வகை வேளாண் பயிர் சாகுபடி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்கத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை இந்த அரசு ஏற்படுத்தும்.
இயற்கை வேளாண்மை மற்றும் பிறதரச்சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.
இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.
2019-2020-ம் ஆண்டில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 79.73 கோடி ரூபாய் செலவிடப்படும்.
2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் கடன்களை வழங்குவதற்கும், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மாநிலத்தில் வலுவான கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன. 2018- 2019-ம் ஆண்டில், பயிர்க் கடன் வழங்க 8 ஆயிரம் கோடி ருபாய் இலக்கு நிர்யணக்கப்பட்டு இதுவரை 9.37 லட்சம் விவசாயிகளுக்கு 6,118 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்கள் மீதான அடமானக் கடனையும் வழங்குகின்றன.
2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர்க் கடன்கள் மீதான வட்டித் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.