கங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அவர் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் கடந்த மார்ச் 28-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் கங்குலி ஐ.சி.சி. வாரியத்திற்கு உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பி.சி.சி.ஐ. சார்பில் அவர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.சி.சி. தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த ‌ஷசாங் மனோகரின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. அந்தப் பதவிக்கான போட்டியில் கங்குலி உள்ளார். இதற்காகவே அவர் ஐ.சி.சி. வாரியத்திற்கு நியமனம் ஆனார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனும், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குனருமான சுமித் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐ.சி.சி. வாரியத்திற்கு நியமிக்கப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி நீடிக்க முடியாது என்று மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கங்குலி மற்றும் கிரிக்கெட் வாரிய மற்ற நிர்வாகிகளுக்கு இ-மெயில் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சஞ்சீவ் குப்தா கூறியதாவது:-

பி.சி.சி.ஐ.யின் விதிமுறை புத்தகப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு யாராவது நியமிக்கப்பட்டால் அவர் வாரியத்தின் தலைவர் பதவி வகிக்க தடை உள்ளது.

ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்கப்பட்ட உடன் கங்குலியின் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி தானாகவே காலியாகிவிடும். பி.சி.சி.ஐ.யின் விதி 14(9) இதைத் தெளிவாக சொல்கிறது. இதனால் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவராக நீடிக்க முடியாது.

இவ்வாறு சஞ்சீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நிராகரித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news