ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை 21 ஆம் தேதி நடக்கிறது – இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதில் அனுப்புவதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பும்.

அதன் பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டு உள்ளது. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது. இந்த நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனையை இஸ்ரோ நிறுவனம் வருகிற 21-ந்தேதி நடத்த உள்ளது.

இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதை பத்திரமாக மீட்டெடுப்பதாகும். இதை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்படும் இந்த சோதனையானது இந்திய விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் விண்கலத்தின் பகுதியை சோதிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

விண்கலம் விண்வெளிக்கு செல்லும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருந்து தப்பித்து அவர்களை கடற்படை வீரர்கள் காப்பாற்றும் முறை பற்றிய ஒத்திகையாகும். இதுகுறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘இந்த சோதனையின் வெற்றியானது முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்துக்கும், அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கும் அடித்தளம் அமைக்கும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news