Tamilசெய்திகள்

ஓ.பி.எஸ்-ன் பதவியை பறிக்குமாறு சபாநாயரிடம் மனு அளிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் முடிவு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் முடிவை பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரித்ததால் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவர் பக்கம் சென்றனர்.

இதையடுத்து சட்ட ரீதியாக வழக்கு தொடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் இறங்கினார். கோர்ட்டு உத்தரவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தன. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாததாக அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி நடைபெறுகிறது. எனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள். அதாவது ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் சட்டமன்றத்தில் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் அனுபவிக்க முடியாது.

இதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாரை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் சட்டமன்ற மரபுப்படி முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளார். எனவே இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகத்தை அமைத்துள்ளார். சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

அதாவது ஓ.பி.எஸ்.சையும் சேர்த்தால் அந்த அணிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் பலம் தான் இருக்கிறது. மீதமுள்ள 63 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பதவியை பறிக்கும் வகையில் 63 எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். அனைவரது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து துணைத்தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும் வழக்கு நிலவரங்கள் பற்றியும் நிர்வாகிகளிடம் விளக்க திட்டமிட்டுள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் இன்னும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் கூறி வருகிறார்கள்.

இது தவிர கட்சியின் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவை செல்லாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் கட்சியில் எம்.ஜி.ஆர். வகுத்து வைத்துள்ள விதிப்படி கட்சிக்கு எதிராக யார் கோர்ட்டுக்கு சென்றாலும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அந்த விதிப்படி தான் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த ஒரு விதியை தான் திருத்த முடியாது. வேறு எல்லா விசயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கிறது. இந்த தகவல்கள் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கப்படும் என்றும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.