X

ஓ.பி.எஸ் இருக்கை பற்றி சட்டசபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன் – சபாநாயகர் அப்பாவு பேட்டி

சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவரின் இருக்கை விவகாரம் தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்து இருந்தாரே?

பதில்:- ஒரு கடிதம் அல்ல, 4 கடிதம் தந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 கடிதம் கொடுத்துள்ளனர்.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் இன்றைய அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார்?

பதில்:- அவர் அலுவல் ஆய்வு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார்.

கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லையே?

பதில்:- மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு விழாவை இன்று அவர்கள் சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருப்பதாக யாரோ தகவல் சொன்னார்கள். அதன் அடிப்படையில் இங்கு வராமல் இருக்கலாம் என நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளைக்கு வருவார்களா?

பதில்:- ஏன் வரக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்?

கேள்வி:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதே? எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்கிறார்?

பதில்:- இந்த விவகாரம் தொடர்பாகத்தான் 6 கடிதங்கள் வந்துள்ளதாக தெரிவித்தேன். இந்த கடிதங்களுக்கு எல்லாம் சட்டமன்றம் நடப்பதால் சட்டமன்றத்தில் தான் அதற்குரிய பதிலை சபாநாயகர் கூற முடியுமே தவிர பொது வெளியில் பேட்டியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது பொருத்தமாக இருக்காது. இதுதொடர்பாக நாளை சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டால் அங்கு நான் பதில் சொல்வேன். எனவே இப்போது சட்டமன்றம் நடக்கும்போது இதற்குரிய பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் (நிருபர்கள்) நாளை வருவீர்களா? அல்லது அவசர வேலையாக வெளிநாடு போகிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லையே?

நாளை சட்டசபைக்கு வாருங்கள். அங்கு எம்.எல். ஏ.க்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன். எனவே யாரும் கேள்வி எழுப்பாமல் நானாக எப்படி பதில் சொல்ல முடியும்?

கேள்வி:- நாளைக்கு அ.தி.மு.க.வினர் வந்து கேள்வி கேட்பார்களா?

பதில்:- அவர்கள் உரிமையை கேட்பார்கள். மக்கள் பிரச்சினையை பேசத்தான் சட்டமன்றம். இதற்கிடையே சில எம்.எல். ஏ.க்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகள் இருக்கும் என்று சொன்னால் சட்டமன்றத்தில் எனது கவனத்துக்கு வந்தால் பதில் சொல்வேன். இந்த மாதிரி தபால் தந்துள்ளோம். அதற்கு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்குரிய பதில் சட்டமன்றத்தில் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.