X

ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த புதிய வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற தடையை மீறி 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவை தலைவரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இது சட்ட விரோதம் என்ற நிலையில், 11-ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதும் சட்ட விரோதமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அ.தி.மு.க. விதிப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகள் ஆகும். இந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கி விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் ஓ .பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில், சில வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து, விசாரணையை நேரம் குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.