அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் தலைமை பதவியை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. அமைப்புகள் மூலம் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இன்று அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவையினரும் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணியினருமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அ.தி.மு.க.வில் அராஜகம் நடைபெறவில்லை. இது ஜனநாயக கட்சி ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார்.
‘பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை’ என்று எம்.ஜி.ஆர். ஒரு பாடலில் சொல்வார். ஓ.பன்னீர்செல்வம் தவறான பாதையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார் என்பதை ஆழ்ந்த கவலையுடனும், மன கஷ்டத்துடனும் சொல்கிறேன். பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவருமே கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.