ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒற்றை தலைமை – அதிமுக அலுவலகம் முன்பு தொண்டர்கள் கோஷம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசும்போது, ‘அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை பற்றி பேசக்கூடாது’ என்று நிர்வாகிகளிடம் பேசி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இந்த தகவல் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு உடனடியாக எட்டியது. உடனடியாக தொண்டர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மகளிர் அணி நிர்வாகிகள், ‘அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உருவாக வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓடிவந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல் நுழைவு வாயிலில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இதுதொடர்பாக மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தக்கூடிய ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூவாத்தூரில் காலில் விழுந்து முதல்- அமைச்சர் ஆனார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் ஜெயலலிதா நேரடியாக முதல்-அமைச்சர் பதவியை வழங்கினார். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.