X

ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனால் அதிமுக-வை கைப்பற்ற முடியாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் சேகர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் இணைந்ததை வரவேற்கிறேன். துரதிருஷ்டவசமாக அ.ம.மு.கவுக்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்து உள்ளனர்.

ஒவ்வொரு தொண்டர்களும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் கட்சியில் நிர்வாகியாக, எம்.எல்.ஏ.வாக., அமைச்சராக, எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கத்திற்கு அந்த எண்ணம் இல்லை. 20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதில் இருந்து வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எல்லா அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து தாருங்கள் என்று கூறுவார்கள். ஆனால் யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியவர் தான் வைத்திலிங்கம். இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.

திருச்சியில் ஒரு கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் என்னைத்தான் திட்டினார்கள். என்னை திட்டி எந்த பிரயோஜனமும் இல்லை. நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். நான் மட்டும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லை. இங்கு வந்திருக்கும் அனைத்து அ.தி.மு.க.வினரும், பொதுச்செயலாளர்கள் தான்.

ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வில் துரோகிகளுக்கு இடம் இல்லை. ஜெயலலிதா சட்டசபையில் பேசும் போது எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகளுக்குமேல் இருக்கும் என்று கூறினார். அவர் மறைவுக்குப்பின்னர் எவ்வளவோ சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம்?.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா இரவு, பகலாக உழைத்து 2016-ல் அ.தி.மு.க. ஆட்சியை உருவாக்கினார் ஆனால் அந்த ஆட்சியை கலைக்க, எதிர்த்து வாக்காளித்தார். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள்.

நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சி வலிமையோடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி, துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா யாரோடு சேரக்கூடாது என நினைத்தார்களோ? தீய சக்தி என கூறினார்களோ? ஜெயலலிதா உயிர் போக காரணமாக இருந்தார்களோ? அவர்களை தேடிச்சென்று தி.மு.க.வுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதை போல பீ டீம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளீர்கள். தி.மு.க.வின் பீ டீமாக செயல்படுபவர்கள் எப்படி இந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க முடியும்.

டி.டி.வி. தினகரன் 10 ஆண்டு காலம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்தை அவர் துரோகி என்றார். தி.மு.க. எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி, ஆட்சியை டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என்றார். நம்மை உருவாக்கிய தலைவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமா? என நாங்கள் கேட்டோம். ஆனால் விசாரணை கமிஷன் அமைத்தால் தான் நாங்கள் இணைவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தி.மு.க. எதிரி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துரோகி என்று கூறிய இரண்டு துரோகிகளுமான டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பர்களாகி விட்டனர். ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் கைப்பற்ற முடியாது.

அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களின் சொத்து என்று நீதிமன்றம் கூறி விட்டது. அதில் இருந்து ஒரு செங்கலை கூட பிடுங்க முடியாது. அ.தி.மு.க.வின் கோவிலான தலைமைக்கழகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடியவர்களை மக்கள் மன்னிப்பார்களா? நாம் நீதிமன்றம் சென்று அவற்றை திரும்ப பெற்றோம். அ.தி.மு.க. என்றால் நாம் தான். நமக்கு எதிரி தி.மு.க. தான். தமிழகத்தில் தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதை கண் இமைபோல ஜெயலலிதா காத்தவர்.

தி.மு.க. நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஆடியோவில் கூறினார். அ.தி.முக. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பணத்தை எப்படி மீட்க முடியுமோ அப்படி மீட்கும். அந்த ரூ.30 ஆயிரம் கோடி குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் கூறியபோது, அவரும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் கவர்னரை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். ரூ. 30 ஆயிரம் கோடி விவகாரத்தை அ.தி.மு.க., சும்மா விடாது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா போன்ற பேதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி என்றாலே மக்கள் அவதிப்படுகிறார்கள். இன்று கள்ளச்சாராயம் குடித்ததினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணுகிறார்கள். அ.தி.மு.க. கட்சி தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினர்.