Tamilசெய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் இன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார்

 

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் தங்கி
சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து
அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் இயங்கி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் இதுவரை
சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தியது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு 8 முறை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால்,
பல்வேறு காரணங்களால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் 21-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில்
இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்னும் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணையம் தரப்பில் கேட்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும்
ஆணையத்தில் ஆஜராகிறார்.

ஆணையத்தின் விசாரணை முடிந்ததும் சசிகலா, அப்பல்லோ தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என தெரிகிறது.