ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரின் வெற்றியை எதிர்த்து வழக்கு!
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பியாக ரவீந்திரநாத் குமார் பதவியேற்றார்.
இந்நிலையில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டுள்ளது. தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.