சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ‘அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்’ என்று கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம், அ.தி. மு.க.வில் கூட்டு தலைமையாக இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.
கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை. அம்மாவின் மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு அதற்கு பிறகு கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள், எண்ணப்படி கூட்டுத் தலைமையாக அ.தி.மு.க. செயல்படும் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கழகத்தின் சட்ட விதிப்படி எங்களின் பணிகளை நிறைவாக ஆற்றினோம்.
அவரிடமும், எங்களிடமும் எந்தவித குறைபாடும் இல்லை. இரட்டை தலைமையா என்பதில் பிரச்சினை கிடையாது. கூட்டு தலைமையில் தான் அ.தி.மு.க. செயல்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அனைவரும் இணைந்து கழகத்தை முழு வலிமையோடு கொண்டு செல்வது தான் எங்கள் எண்ணம்.
அம்மா சொன்னது போல் 100 ஆண்டுகளை நோக்கி கழகம் பயணிக்கும். எங்கள் எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு என்பதுதான். நாங்கள் அழைப்பு விடுப்பதற்கு காரணம் எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. ஏற்கனவே நடந்தவைகளை நாங்கள் தூக்கியேறிந்து விட்டோம். அவை தொலைந்து போகட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உளளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு காலக் கட்டத்தில் 2 அணியாக பிரிந்து இருந்தது. இரண்டு அணியும் 2017-ல் இணைந்தது. ஓ.பி.எஸ். வெளியில் இருந்தார். பிறகு நானும், அவரும் இணைந்தோம். மூத்த தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றாக கூடி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் 2 அணியும் ஒன்று சேர்க்கப்பட்டது. அப்போது பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இந்த பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது. பொது உறுப்பினர்களால் அல்ல. அப்போது சில சட்ட திட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ஒன்றாக இருந்த காரணத்தினால் 2 பேருக்கும் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால் அதை தனியாக எடுத்து சட்ட விதிகளை உருவாக்கினோம். பொதுச்செயலாளருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. கூடவே விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இணைந்து தேர்தலையும் நடத்த வேண்டும். எங்களது சட்ட திட்ட விதிப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சட்ட திட்ட விதிகளை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கிளை கழக தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வருகிறோம்.
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொது உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து கூடுகின்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று இருக்கிறது. ஏனென்றால் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. அதனால் தேர்தல் நடைபெறுகின்ற போது இந்த தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம்.
இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. இதுதான் நடைபெற்ற சம்பவம். இவர்கள் எப்படி ஒற்றை தலைமையை கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். எங்களுடன் பிரிந்து சென்றவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் கூட இதை முன்வைத்தார்கள். 2663 பேர் மட்டுமே முடிவு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்கள். இந்த 2663 பேரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். யாரும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இது தான் வரலாறு. இதன்படி தான் கட்சி நடக்கிறது.
கூட்டு தலைமையாக இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க இயலாது. அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஏற்கனவே தர்ம யுத்தம் சென்றார். யாரை எதிர்த்து சென்றார். அவருக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் அவருக்கு முக்கியம். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. இணைவோம் என்பதை எதன் அடிப்படையில் வைத்து அவர் எப்படி சொல்கிறார்.
கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ரவுடிகளை ஏவி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடி சென்று உள்ளனர். தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் எப்படி இணைய முடியும். அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது தீய சக்தி தி.மு.க. அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்திருக்கிறார். அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பாராட்டுகிறார். இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.
கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகனே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியை புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்? தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம்.
நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். பதவி இல்லை என்றால் தர்மயுத்தம் செய்வார். யாரும் வேண்டாம் என்பார். மீண்டும் பதவி வேண்டும் என்றால் எல்லோரையும் சேர்த்துக்கொள்வோம் என்பார். இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு.
நாங்கள் 15 நாட்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தின் படிதான் கட்சி நடத்த முடியும். கட்சியின் சட்டத்திட்ட விதிகளை மதிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சி தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை பிரதிபலிக்க வேண்டும். மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும். அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.