Tamilசெய்திகள்

ஓலா, உபேர் கார் ஒட்டுநர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது

ஓலா, உபேர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது.

இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் ஆப் வழியாக தங்கள் செல்போன் மூலம் வாகனங்களை புக்கிங் செய்து செய்து பயணம் செய்கிறார்கள். இந்த போராட்டத்தால் அவர்கள் கார், ஆட்டோக்களை புக்கிங் செய்ய முடியவில்லை. ஆட்டோ நிலையங்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் வீடுகளில் இருந்து பஸ், ஆட்டோ நிறுத்தங்களுக்கு வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஆப் பயன்படுத்தாத ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதில் தீவிர மாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.

கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது. இதற்கிடையே இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, உபேர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

வேலைநிறுத்தம் குறித்து ஜாகீர் உசேன் கூறியதாவது:-

ஓலா, உபேர் செயலி மூலம் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ, கார் வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் ஓடாது. புக்கிங் எடுக்க மாட்டோம்.  2 வருடமாக இந்த அரசு முறைப்படுத்தவில்லை. எங்கள் தொழிலை முறைப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.