திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பத்தாண்டுகால இருளை விரட்டி, புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் உயர்வான திட்டங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்கள், அரசின் அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்தும் அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பு, அவற்றின் மீதான கண்காணிப்பு என இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.
ஓயாத உழைப்பின் ஓராண்டு எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஓராண்டுக்கு முன்பு, தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக இருந்ததால் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையோ, வெற்றிவிழா மாநாட்டினையோ நடத்திட இயலவில்லை.
ஓராண்டு காலத்தில் கொரோனா இரண்டாவது அலை – மூன்றாவது அலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியதுடன், அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் புரிந்த மனநிறைவோடு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வாக, இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்துள்ளன.
சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் மீதான விவாதங்களும் நிறைவடைந்து உள்ளன.
கடந்தகால ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் தலையில் – தமிழர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ள நிலையிலும், திமுக அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் வகையில், அனைத்துத் துறைகளின் சார்பிலும் மக்கள்நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களாட்சியின் மாண்பைக் காத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்பேரவையில் கோரிக்கையினை வைத்தேன்.
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பது தேர்தல் களத்தில் மட்டும்தான். சட்டமன்றத்தில் மக்களுக்கான நன்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது நாம் ஒரே கட்சி. அதுதான் மக்கள் கட்சி என்று தெரிவித்தேன்.
அண்டை நாடான இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், அங்கு வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்களுக்கு மட்டுமின்றி, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் உணவுப்பொருள் – மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்கி உதவிட தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
அதற்கான அனுமதியை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து வழங்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி, தற்போது உரிய அனுமதியுடன் நிவாரணப் பொருட்கள் இலங்கை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றன.
ஜனநாயக மாண்பு காத்திடும் வகையில், சட்டப்பேரவை நிகழ்வுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கினார் பேரவைத் தலைவர்.
ஆனாலும், எதிர்க்கட்சித் தரப்பில் அவர்களுக்கேயுரிய தன்மைகளுடன் திமுக அரசு மீது குறைகளையும் புகார்களையும் அவதூறுகளையும் முன்வைத்தபோது, அமைச்சர்கள் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கங்களை அளித்து, உண்மை நிலை என்ன என்பதை பேரவை உறுப்பினர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும்படி செய்தனர்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் மிகச் சரியான பதில்களை அளித்தது போலவே, முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் ஆணித்தரமான பதில்களை அளித்தனர். தங்கள் துறையில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை விரிவாக விளக்கினர்.
ஆட்சியின் இலக்கணம், சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்று கலைஞர் நமக்கு வழிகாட்டியிருக்கிறார். அதன் அடிப்படையில், ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட மகத்தான சாதனைகளை மிகச் சிறப்பான முறையிலே புத்தகங்களாக, மின்னணு வெளியீடுகளாக, காணொலிகளாக, துண்டறிக்கைகளாக, விளம்பரங்களாக வழங்கியிருக்கிறோம்.
அந்தச் சாதனைகளை நேரடியாக எடுத்துச் சொல்வது தனித்துவமானது. திமுகவிற்கும் மக்களுக்கும் உணர்வுப்பூர்வமான உறவுப் பாலமாக அமைவது. ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பேராதரவுடனும் பங்கேற்புடனும் நடந்து வருவது குறித்த தகவல்கள், உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகம் தருவதுடன், மேலும் உழைத்திட ஊக்கம் அளிக்கிறது.
மே 18-ஆம் நாளன்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் உங்களை நேரில் காணலாம் என்ற பேராவல் கொண்டிருந்தேன். திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு அதற்கான முன்னேற்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டார்.
பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தள்ளிப் போடப்பட்டாலும், உங்களை நான் சந்திக்க வருவதை இயற்கையாலும் நிச்சயம் தடுத்து விட முடியாது.
ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்திப்பதும், அவர்களின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதும் எப்போதும் தொடரும். ஓராண்டு காலத்தில் வெளிப்படுத்தி வரும் உழைப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, ஓராயிரம் சாதனைகளை நிகழ்த்திட முடியும் என உறுதியுடன் நம்புகிறேன்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் விரைவில் பங்கேற்க இருக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து, திமுக சார்பிலான நிகழ்வுகளிலும் உங்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன். கலைஞர் வழியில் உழைத்திடுவோம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்திடுவோம். அதனால் மக்கள் பெறும் பயன்களை எத்திசையும் முழங்கிடுவோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.