Tamilசெய்திகள்

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஆணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ம.சு. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டனர்.