தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.
2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தென்ஆப்பிரிக்கா தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 7-ம் இடம் பிடித்தது.
ஐபிஎல் 2020 போட்டியில் 14 ஆட்டங்களில் 454 ரன்கள் குவித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 207 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 164.28 ஆகும்.
இந்நிலையில் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையடுத்து மேற்கிந்தியத் தீவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை.