ஓய்வு அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் – அணிவகுத்து நின்று மரியாதை செய்த சக வீரர்கள்

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும் கடைசி போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார். தனது ஓய்வு குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதவாது:-

இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது.

இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது. சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல். அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து நின்றனர்.

அப்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது நீண்ட கால பந்துவீச்சு கூட்டாளியான ஆண்டர்சனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். அவர்கள் களத்தில் இறங்கிய போது, பிராட் ஆண்டர்சனை ஒரு பக்கமாக அணைத்து, மரியாதையின் போது அவரையும் அழைத்துச் சென்றார். ஆண்டர்சன் எல்லைக் கோட்டிற்குப் பின்னால் நின்று பிராட் தனது தருணத்தை ரசிக்க வைத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports