Tamilசெய்திகள்

ஓபிஎஸ் தம்பி மீண்டும் கட்சியில் சேர்ப்பு! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதற்கு காரணமான ரத்த வங்கி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கலெக்டர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மருத்துவ தொழில்நுட்பம் மூலம் எச்.ஐ.வி. கிருமியின் தாக்கம் அந்த பெண்ணின் உடலில் முழுமையான அளவு பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சிக்கல்கள் மீண்டும் வராமல் இருக்க ரத்த வங்கிகளில் உள்ள அனைத்து ரத்தமும் மறுபரிசோதனை செய்யப்பட்டு, எச்.ஐ.வி. கிருமி கலக்காத ரத்தம் என்று குறிப்பிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒருவரை கட்சியில் இருந்தும் நீக்கம் செய்த மறுநாளே அவர் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கி, அது கட்சிக்கு திருப்தி அளித்தால் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார். இதில் காலக்கெடு எதுவும் கிடையாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் காலையில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாலையில் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்திருக்கிறது. இதேபோல் எம்.ஜி.ஆர். காலத்திலும் நடைபெற்று இருக்கிறது.

ஒருவர் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் போது, அண்ணா சொன்னது போல் “மன்னிப்போம், மறப்போம்” என்ற அடிப்படையில் எதுவும் மன்னிக்கக்கூடியதும், மறக்கக்கூடியதும் தான். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா வருத்தம் தெரிவித்ததை அடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் எதற்காக நீக்கம் செய்யப்பட்டார் என்பது உட்கட்சி விவகாரம். எல்லா கட்சியினரும் பின்பற்றுவதை தான் நாங்களும் பின்பற்றினோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றியதை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

உயர் மின்கோபுரம் அமைக்கும் விஷயத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் முக்கியம். எல்லோருக்கும் மின்சாரம் வழங்குவதும் முக்கியம். எனவே பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நல்ல முடிவை அரசு எடுக்கும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகளாக ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர். ஜெயலலிதாவின் வீட்டுப்பக்கமும், நாடாளுமன்றம் பக்கமும் போகக்கூடாது என்று கூறி விரட்டப்பட்டார்.

எதற்காக டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டார் என்பதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரிய நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். டி.டி.வி.தினகரன் அன்றைய காலத்தில் ஜெயலலிதாவையே ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்து ராஜதுரோகம் கூட செய்து இருக்கலாம். இது போன்ற அரசியல் துரோகிகளுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *