தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குசாவடிகளில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு எந்திரங்கள் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த 20-ந்தேதி மதுரை மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் கீழ் பணியாற்றும் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான கே.சம்பூரணம் என்பவர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் சென்று உள்ளார். இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் விரிவான அறிக்கை அனுப்ப கேட்கப்பட்டது. அதன்படி அவர் அறிக்கை அனுப்பி உள்ளார்.
தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் எந்திரங்கள் உள்ள அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) அருகில் உள்ள தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்திருந்த அறைக்குத் தான் (ஸ்டோர் ரூம்) சென்றுள்ளார். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை பாதுகாப்பாக உள்ளது. அங்கு யாரும் அத்துமீறி நுழையவில்லை. நுழையவும் முடியாது. இருந்த போதிலும் விதிகளை மீறித் தான் அவர் சென்றுள்ளார். முறையாக அனுமதி பெறாமல், முறையான அடையாள அட்டை காண்பிக்காமல் அறைக்குள் சென்றதால் அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்யத் தான் தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள வளாகத்துக்கு சென்றதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தபால் ஓட்டுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கேட்கின்றனர். அனைத்து மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர்தான் உள்ளனர். அதனை தொடர்ந்து மாநில போலீசாரும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
அரசியல் கட்சியினரும் அங்கு சென்று பார்க்கலாம். ஏதாவது குறை இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கலாம். இருந்தாலும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி மின்னணு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.
மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னையில் இருந்து கண்காணிக்க இணைப்பு வசதி இல்லை.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் சில பகுதியில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம், எந்தந்த பகுதிகளில் எத்தனை பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர், ஒரு சப்-கலெக்டர் தலைமையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புவதாக கூறி உள்ளார்.
தொடர்ந்து மே 19-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 4 சட்டசபை தொகுதி இடைதேர்தல்களுக்கான மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.