பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அண்மை காலமாக இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலவதாக நேற்று நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார். இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. பாட்னாவில் நடைபெற்ற இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்கிறார்.
துணை முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்கிறார். இதனிடையே, தமக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த பாஜக அல்லாத அரசை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகாரில் அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் முடிவை பாஜக கடுமையாக சாடி உள்ளது.
பீகார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்ததாகவும், ஆனால் மக்களின் ஆணையை நிதீஷ் குமார் மதிக்கவில்லை என்றும், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக அவரை பலமுறை பீகார் முதலமைச்சராக்கியதும் என்றும் தெரிவித்தார்.
பாஜகவுடன் இருந்தபோது நிதிஷ்குமாருக்கு கிடைத்த மரியாதை இனிமேல் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து கிடைக்காது என பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.
பீகாரில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும், அவரை முதல்வராக்கினோம் என்றும், அவரது கட்சியை உடைக்க நாங்கள் முயன்றதில்லை, எங்களுக்கு துரோகம் செய்தவர்களின் கட்சிகளை மட்டுமே உடைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.