X

ஓட்டு போட்டால் பரிசு – மத்திய பிரதேச தேர்தல் ஆணையம் அதிரடி

மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் 3 கட்டமாக 21 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது.

மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இந்தூர் தொகுதியும் ஒன்று. இங்கு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு பிரசாரம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருந்தது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக பிரத்யேகமாக செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அந்த செயலியை வாக்காளர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நாளன்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இதோடு வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த ஜோடி என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதுதவிர ஓட்டுப்போட்ட பின் கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டல்களில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலை, ஸ்வீட் கடைகள், தியேட்டர்களில் படம் பார்க்க செல்பவர்களுக்கு பாப்கார்ன் பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பென்சனர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.