X

ஓட்டுக்கு பணம் வாங்கினால் 5 வருடத்திற்கு எதுவும் கேட்க முடியாது – கமல்ஹாசன்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் சின்னதாராபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை மாற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தலில் களம் காண வந்திருக்கிறேன். இன்னமும் தண்ணீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் தண்ணீர் பிரச்சினைக்கு எப்போதே தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தருவது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த தொகுதிக்கு முருங்கை தொழிற்சாலை கொண்டு வருவோம் என சொல்லி 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் என்ன நடந்தது?. ஒன்றும் நடக்கவில்லை. இதை சரி செய்வதற்காகத்தான் எங்கள் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

வருங்கால சந்ததியினருக்கு கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும். மக்கள் நலன் முக்கியமாகும். ஆண்ட கட்சியையும், ஆளுங் கட்சியையும் பார்த்து விட்டீர்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கிராம பஞ்சாயத்தில் அவசியம் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பணப்பட்டு வாடா குறித்து தேர்தல் ரத்து ஆகியுள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கி விட்டால் அடுத்த 5 ஆண்டுகள் அவரிடம் எதுவும் கேட்க முடியாது. அதனை உணர்ந்து கொள்ளுங்கள். இந்தநிலையை மாற்ற ஒரு வாய்ப்பினை தாருங்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு அளிக்கும் வாக்குகள் உங்களையும், உங்கள் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news