X

ஓசூர் மாநகராட்சியின் மேயராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வெற்றி

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில், தி.மு.க.சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஏ.சத்யா 27வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் எஸ். நாராயணனுக்கு 18 வாக்குகள் கிடைத்தன.

ஓசூர் நகராட்சியாக இருந்து, கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மாநகராட்சி, கடந்த 19-ந் தேதி முதல் தேர்தலை சந்தித்தது. இதில், தி.மு.க. 21 இடங்களிலும், அ.தி.மு.க. 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் பெற்றி பெற்றனர். பின்னர், 4 சுயேட்சைகள் தி.மு.க.விலும், 1 சுயேட்சை வேட்பாளர் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தனர். சுயேட்சைகள் தி.மு.க.வில் சேர்ந்ததை அடுத்து தி.மு.க.விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தது.

தி.மு.க. சார்பில் ஓசூர் மாநகர பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்ஏவுமான எஸ். ஏ.சத்யா அறிவிக்கப்பட்டு, இன்று நடந்த மறைமுக தேர்தலில் அமோக வெற்றிபெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயரான எஸ்.ஏ.சத்யா ஓசூர் மாநகர தி.மு.க. பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர், மோட்டார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். இவருக்கு, ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

சத்யா, கடந்த 2006 ஆம் ஆண்டு ஓசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். பின்னர், கடந்த 2019 ஆண்டு, அ.தி.மு.க அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி, தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஓசூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளராக சத்யா போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார். சத்யா, தற்போது ஓசூர் 23-வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ளார்.