ஓசூரில் புதிய விமான நிலையம்! – இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தாக்கல் செய்த விமானத்துறை அமைச்சகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி டிட்கோ கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.
இந்த நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.