ஓசிசிஆர்பி வெளியிட்ட ஆய்வறிக்கை எதிரொலி – அதானி குழுமத்தின் பங்குகளில் சரிந்தன
இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரும் வர்த்தக நிறுவனம், 61 வயதான கவுதம் அதானி எனும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரால் தொடங்கப்பட்ட அதானி குழுமம்.
இந்நிறுவனம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் ஈட்டி வருகிறது. பெரும் பணக்காரர்களும் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களும் ஊழல், சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பண பதுக்கல் மற்றும் பரிவர்த்தனை மற்றும் பங்குச்சந்தை முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுவதை துப்பறிந்து, ஆதாரங்களுடன் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் ஓசிசிஆர்பி (OCCRP) எனும் ஊழலுக்கு எதிரான அமைப்பு, இன்று அதானி குழுமத்தின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஸோரோஸ் என்பவரின் நிதியுதவியுடன் இயங்குவது ஓசிசிஆர்பி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில், மொரிஷியஸ் நாட்டில் செயல்படும் சில மறைமுக நிதி (opaque funds) அமைப்புகள் மூலமாக இந்திய பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதானி குடும்பத்தை சேர்ந்த வர்த்தக கூட்டாளிகளுக்கும் பங்களிப்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகின் ஒரு சில நாடுகள், அந்நாட்டில் முதலீடு செய்பவர்களின் பின்னணி குறித்து ஆராயாமல் முதலீடுகளை பெற்று, அவர்கள் செய்யும் முதலீட்டிற்கு வரிச்சலுகைகளையும் அளித்து வருகிறது. இது கருப்பு பண பரிவர்த்தனைக்கு உதவும் ஒரு வழிமுறை என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஓசிசிஆர்பி, தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, அது போன்ற நாடுகளிலிருந்தும், அதானி நிறுவனத்தின் சில மின்னஞ்சல்களிலிருந்தும் பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இக்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கும் அதானி நிறுவனம், இது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் அக்குழுமம் தெரிவித்திருப்பதாவது:
இக்குற்றச்சாட்டுகள் முன்னரே எங்கள் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டவை தான். சம்பந்தபட்ட விசாரணை அமைப்புகளால் தீவிரமாக விசாரணைகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு எங்கள் நிறுவனத்தின் மீது எந்த தவறும் இல்லை என்றும் இக்குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது. மூடப்பட்ட அவ்வழக்குகளை தற்போது, மீண்டும் கடைந்தெடுத்து புதுப்பித்து, புதிய குற்றச்சாட்டாக ஓசிசிஆர்பி அமைப்பு முன்வைத்திருக்கிறது.
பங்கு சந்தை முதலீட்டில் எந்த தவறான கையாளுதலும் நடைபெறவில்லை என ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிவித்தது. எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கவும், எங்கள் குழுமங்களின் பங்குகளை சரிய வைத்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் உள்ளவர்களுக்கு உதவிடும் வகையிலும் தான் ஜார்ஜ் ஸோராஸினால் நிதியுதவி பெற்ற இந்த அமைப்பு உதவுகிறது.
இவ்வாறு அதானி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் அதானி குழுமத்தை சேர்ந்த பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓசிசிஆர்பி அறிக்கை வெளிவந்ததும் இன்று சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.