ஒலிம்பிக் போட்டி குறித்து இப்போது சிந்திக்க விரும்பவில்லை – பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நடந்த 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்ட சிந்து முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்துள்ளார்.

வெற்றிக்கு பிறகு சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளன இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல்முறை தோல்வி அடைந்த போது வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு தோல்வி அடைந்த போது கோபமும், வேதனையும் ஏற்பட்டது. ஏன் அந்த ஒரு போட்டியில் என்னால் வெல்ல முடியவில்லை என்று எனக்கு நானே கேள்வி கேட்டதுண்டு. ஆனால் இந்த ஆட்டத்தில் முந்தைய தோல்வியை நினைத்து கவலைப்படாமல் எனது ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லவில்லையே? என்று என்னை பார்த்து அடிக்கடி கேள்வி கேட்டு விமர்சித்தவர்களுக்கு எனது ராக்கெட் மூலம் பதில் அளிக்க விரும்பினேன். அந்த பதில் தான் இந்த வெற்றியாகும்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. நான் போட்டிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி சிந்திப்பது எனக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கிறது. எனது ஆட்டத்தை மட்டும் நினைத்து முழு திறமையும் வெளிப்படுத்தினால் வெற்றி தானாகவே வரும்.

ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அது குறித்து இப்போது சிந்திக்க விரும்பவில்லை. தற்போது எனது வெற்றியை அனுபவிக்க விரும்புகிறேன். எனது பேரார்வம் பேட்மிண்டன் தான். இன்னும் நிறைய பதக்கங்கள் என்னால் வெல்ல முடியும் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news