இந்திய மல்யுத்த மூத்த வீரர் சுஷில்குமார். 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். 2018-ம் ஆண்டு கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டிலும் முத்திரை பதித்தார்.
அடிக்கடி காயத்தில் சிக்கிய 36 வயதான சுஷில்குமார், பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி ரோமிலும் (ஜனவரி 15-18), ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியிலும் (பிப்ரவரி 18-23), ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று சீனாவிலும் (மார்ச் 27-29) நடக்கிறது.
இதில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மல்யுத்த உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்குகிறது.
இதில் பிரீஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் ஜாம்பவான் சுஷில்குமாரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சுஷில்குமார், ‘‘பயிற்சியின் போது எனக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. காயம் முழுமையாக குணமடைந்த பிறகே போட்டியில் பங்கேற்க முடியும். எப்படியும் 2 வாரத்திற்குள் உடல்தகுதியை எட்டி விடுவேன். எனவே எனது பிரிவுக்குரிய தகுதி போட்டியை தள்ளிவைக்க வேண்டும்’’ என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கேட்டுக் கொண்டார். மேலும் தனது காயம் தொடர்பான மருத்துவ சான்றிதழையும் மல்யுத்த சங்கத்துக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் சுஷில்குமாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. திட்டமிட்டப்படி தகுதி போட்டிகள் இன்று நடக்க உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங், உதவிச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் கூறுகையில், ‘தகுதி போட்டியை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சுஷில்குமார் காயமடைந்தாலும் கூட 74 கிலோ பிரிவில் பங்கேற்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். இந்த பிரிவில் வெற்றி பெறும் வீரர் ரேங்கிங் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம். ஒரு வேளை மார்ச் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றுக்கு நம்மிடம் வலுவான வீரர் இல்லை என்று உணரும் பட்சத்தில், சுஷில்குமாரை தகுதி போட்டியில் பங்கேற்கும்படி அழைக்க வாய்ப்புள்ளது’ என்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அசத்திய ரவி தாஹியா (57 கிலோ), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோர் மட்டுமே இதுவரை இந்திய மல்யுத்தத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார்கள்.
பெண்களுக்கான தகுதி போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது.